பரோல் வாரிசு
அத்தியாயம் 9: சிறைக்குள் ஒரு வேட்டை… நிலாவின் கண்ணீர் யுத்தம்!
எழுத்தாளர்: கியா ஜோதி
சிறைச்சாலையின் அந்த இருட்டு அறைக்குள் வெற்றியின் மௌனம் ஒரு எரிமலையைப் போலக் குமுறிக்கொண்டிருந்தது. பரோல் முடிந்து வந்த அவனுக்கு அந்த நான்கு சுவர்களும் இப்போது புதிய சுமையைத் தந்தன. முன்னெல்லாம் சிறை அவனுக்கு ஒரு தண்டனையாகத் தெரிந்தது, ஆனால் இப்போது அது அவனது வாரிசைச் சுமக்கும் நிலாவிடமிருந்து அவனைப் பிரித்து வைத்திருக்கும் ஒரு பெரும் தடையாகத் தெரிந்தது.
வெற்றி தனது சிமெண்ட் படுக்கையில் அமர்ந்து, ஜன்னல் வழியாகத் தெரிந்த அந்த ஒற்றை நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது சிறையின் இரும்புக் கதவு கரகரவெனத் திறந்தது.
உள்ளே நுழைந்தது அந்தப் புதிய கைதி—’காளி’. அவன் சத்யாவின் வலது கை என்று சிறைக்குள் எல்லாருக்கும் தெரியும். அவன் முகத்தில் ஒரு வக்கிரமான சிரிப்பு இருந்தது. “என்ன வெற்றி? பரோல் முடிஞ்சு வந்துட்டியா? சொகுசு பங்களாவுல ராணி கூடக் குடும்பம் நடத்திட்டு, இப்போ இந்தச் சாக்கடைக்குள்ள வந்தது எப்படி இருக்கு?” என்று நக்கலாகக் கேட்டான்.
வெற்றி அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. “காளி… நான் இப்போ பழைய வெற்றி இல்லை. எனக்கு முன்னாடி ஒரு தப்பு செஞ்சா நான் பொறுத்துக்குவேன், ஆனா இப்போ எனக்குப் பின்னாடி ஒரு உயிர் இருக்கு. அதைத் தொட நினைச்சா, உன் உயிர் இங்கே மிஞ்சாது,” என்று மிக அமைதியாகவும் ஆழமாகவும் எச்சரித்தான்.
காளி சிரித்தான். “உன் வாரிசைத் தொட நான் எதுக்கு வெளில போகணும்? இங்கேயே உன்னை முடிச்சுட்டா, அந்த வாரிசு அனாதை ஆயிடுமே! இன்னைக்கு ராத்திரி உனக்குக் கடைசி ராத்திரிடா,” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
வெளியே… நிலாவின் வீட்டில் இரவு கவியத் தொடங்கியது. நிலா தனது அறையில் அமர்ந்து வெற்றியின் பழைய புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென அவளது வயிற்றில் ஒரு மெல்லிய வலி ஏற்பட்டது. அது சாதாரண வலியா அல்லது பயத்தினால் வந்ததா என்று அவளுக்குப் புரியவில்லை.
லட்சுமி அம்மாள் உள்ளே வந்தார். “என்ன நிலா? முகம் ஒரு மாதிரி இருக்கு? பாப்பா எதுவும் உதைக்குதா?” என்று கேட்டார்.
நிலா கண்கலங்கினாள். “இல்லம்மா… ஏதோ ஒரு கெட்ட சகுனம் தோணுது. வெற்றிக்கு அங்க ஏதோ ஆபத்து இருக்குமோன்னு பயமா இருக்கு. அவன் இல்லாம இந்த வீடு எனக்கு ஒரு பெரிய சிறையாத் தெரியுதும்மா,” என்று அழுதுகொண்டே தாயின் மடியில் சாய்ந்தாள்.
அப்போது வாசலில் ஒரு ஜீப் வந்து நின்றது. ஏட்டு பாபு (யோகிபாபு) பதற்றத்துடன் உள்ளே ஓடி வந்தார்.
பாபு மூச்சு வாங்கப் பேசினார்: “அம்மா நிலா! ஒரு கெட்ட செய்தி. அந்தச் சத்யா பய ஜெயில்ல இருக்குற காளிக்கு ஒரு பெரிய தொகையை அனுப்பி இருக்கானாம். இன்னைக்கு நைட் நம்ம வெற்றியைக் காலி பண்ண ஸ்கெட்ச் போட்டு இருக்காங்க. எனக்கு இப்போதான் அந்த வார்டன் மூலமா நியூஸ் கிடைச்சது. நான் இப்போவே ஜெயிலுக்குக் கிளம்புறேன்!”
நிலா பதறிப் போனாள். “பாபு சார்! எனக்கும் ஒரு கார் ரெடி பண்ணுங்க. நானும் வர்றேன். என் புருஷனுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, நான் யாரையும் சும்மா விடமாட்டேன்!” என்று ஆவேசமாக எழுந்தாள்.
பாபு அவளைத் தடுத்தார். “அம்மா! நீ இப்போ இருக்குற நிலைமைக்கு அங்க வரக்கூடாது. அது ரொம்ப ஆபத்து. நான் இருக்கேன்ல… என் லத்தி இருக்குற வரைக்கும் வெற்றியோட ஒரு முடியைக் கூட யாராலும் தொட முடியாது. நீ இங்கேயே இரு… நான் போயி அந்தப் ‘புலி’யைக் கூட்டிட்டு வர்றேன்!” என்று சொல்லிவிட்டுத் தனது ஜீப்பில் சீறிப் பாய்ந்தார்.
சிறைக்குள்… நள்ளிரவு 2 மணி.
வெற்றி ஆழ்ந்த உறக்கத்தில் இல்லை. அவனது கண்கள் மூடியிருந்தாலும், அவனது செவிகள் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தன. மெதுவாக ஒரு நிழல் அவனது அறையை நெருங்கியது. கையில் ஒரு கூர்மையான இரும்புத் தகடு மின்னியது. அது காளிதான்.
காளி கத்தியை ஓங்கிக்கொண்டு வெற்றியின் மீது பாயப் போனான். ஆனால், வெற்றி மின்னல் வேகத்தில் உருண்டு அவனது காலை வாரிவிட்டான். காளி தரையில் விழுந்தான்.
”காளி! நீ வெறும் கூலிப்படை. உனக்குத் தேவைப் பணம். ஆனா எனக்குத் தேவை என் குடும்பம். ஒரு குடும்பத்தலைவன் தன் வாரிசுக்காகப் போராடும்போது, அவன்கிட்ட எந்தப் படையும் ஜெயிக்க முடியாதுடா!” என்று சொல்லி அவன் முகத்தில் ஒரு ஓங்கி ஒரு குத்து விட்டான் வெற்றி.
சிறை அறைக்குள் ஒரு பயங்கரமான சண்டை தொடங்கியது. இருட்டில் இருவரும் உருண்டனர். காளி தனது கத்தியால் வெற்றியின் தோளில் ஒரு கீறல் இட்டான். ரத்தம் கசியத் தொடங்கியது. ஆனால், வெற்றி அந்த வலியை உணரவில்லை. அவனது நினைவில் நிலாவின் முகம் மட்டுமே இருந்தது.
சரியாக அந்த நேரத்தில் பாபு தனது டீமுடன் சிறைக்குள் நுழைந்தார். “ஏய்! யாருடா அது? நைட் நேரத்துல ஜிம்னாஸ்டிக்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க? காளி! கத்தியைக் கீழே போடுடா… இல்லன்னா உனக்கு ஒரு ‘பரோல்’ கூடக் கிடைக்காத மாதிரி உன் காலில் ஒரு ஓட்டை போட்டுடுவேன்!” என்று தனது துப்பாக்கியை நீட்டினார்.
பாபுவைப் பார்த்ததும் காளி கத்தியைக் கீழே போட்டான். பாபு ஓடி வந்து வெற்றியைப் பிடித்தார். “தம்பி! என்னப்பா இது? தோள்ல ரத்தம் வருது? இரு… நான் இப்போவே டாக்டரை வரச் சொல்றேன். அந்தச் சத்யா பயலை நான் சும்மா விடமாட்டேன். அவனுக்கு ஒரு பெரிய ஆப்பு ரெடி பண்ணிட்டு தான் வந்திருக்கேன்.”
மறுநாள் காலை…
நிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவளுக்கு அந்தப் பதற்றத்தில் லேசான மயக்கம் வந்திருந்தது. கண் விழித்துப் பார்த்தபோது, அங்கே வெற்றி நின்றிருந்தான்!
நிலா ஆச்சரியத்தில் உறைந்து போனாள். “வெற்றி! நீ எப்படி இங்கே?”
பாபு பின்னால் இருந்து சிரித்துக்கொண்டே வந்தார். “அம்மா நிலா… வெற்றிக்குத் தற்காலிகப் பரோல் கிடைச்சிருக்கு. நேத்து நைட் நடந்த கொலை முயற்சிக்கு அந்தச் சத்யா தான் காரணம்னு ஆதாரம் கிடைச்சிருச்சு. அதனால விசாரணை முடியுற வரைக்கும் வெற்றியை உன் கூடவே இருக்கச் சொல்லி கோர்ட் ஆர்டர் குடுத்துருச்சு. இனி வெற்றி உன் கூடவே தான் இருப்பான்!”
வெற்றி நிலாவின் கைகளைப் பற்றிக் கொண்டான். “நிலா… இனிமே நம்மள யாராலும் பிரிக்க முடியாது. நம்ம வாரிசு சுதந்திரமான ஒரு அப்பாவுக்கு மகனாத் தான் பிறப்பான்,” என்றான் கண்ணீருடன்.
பாபு தனது தொப்பையைச் சரி செய்து, “அப்பாடா! ஒரு வழியா ‘க்ளைமாக்ஸ்’ பக்கம் வந்துட்டோம். தம்பி வெற்றி… இனிமே அந்தச் சத்யா பயலை நான் கவனிச்சுக்கிறேன். நீ நிலாவுக்கும், பிறக்கப்போற பாப்பாவுக்கும் ஒரு நல்ல பாதுகாப்பு அரணா இரு. அப்புறம் அந்த அதிரசம் இருந்தா ஒரு ரெண்டு பார்சல் குடுப்பா… ரொம்பப் பசிக்குது!” என்று நகைச்சுவையாகச் சொல்ல, அந்த மருத்துவமனை அறையே சிரிப்பொலியால் நிறைந்தது.

1